தன்னம்பிக்கையுடன் உங்களை நீங்கள் எப்படி வெளிப்படுத்துவது?

நீங்கள் எப்போதாவது கவனித்ததுண்டா? ஒருவர், ஆடம்பரமான உடைகள் உடுத்தாமல், எளிமையான, அமைதியான இயல்புடன்  இருந்தால் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்.

இந்த எளிமையானவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள் 

ஆம், அதுதான் உங்களை நீங்கள் வெளிப்படுத்தும் விதம். அது உங்களுக்கு அமைதியான சக்தியை தரும்.

நம் கலாச்சாரத்தில், எளிமைக்கு எப்பொழுதும்  முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நேர்த்தியாக உடை அணிவது, கண்ணியமாக நடப்பது, மரியாதையாகப் பேசுவது ஆகியவை நம் பாரம்பரியத்தில் உள்ளன. இன்றைக்கு உலகம் நவீன நாகரிகம் (fashion) மற்றும் தரமான முத்திரைகளுக்கு (Brand Name) பின்னால் ஓடிக்கொண்டிருந்தாலும், அந்த எளிமையான  அணுகுமுறை இன்றும் சிறப்பாகச் மதிக்கப்படுகிறது மற்றும்  உரக்கப் பேசப்படுகிறது. நீங்கள் அழகாக இருக்க ஒரு டிசைனர் ஆடை தேவையில்லை. அதற்கு பதிலாக நீங்கள் சுத்தமாகவும், நம்பிக்கையுடனும், அமைதியாகவும் இருந்தாலே போதும்.

இந்தக் கட்டுரை விதிகளைப் பற்றியது அல்ல. எளிமைதான் சிறப்பு என்பதையும், உங்கள் உடை உங்களைப் பற்றிச் சொல்வதை விட, நீங்கள் உங்களை வெளிப்படுத்தும் விதம் தான் அதிகமாக பேசப்படும் என்பதையும் நினைவூட்டுவதற்காகத்தான்.

1. நீங்கள் அணிந்திருக்கும்  உடைகளை விட உங்களுடைய உடல்மொழி முக்கியம்

உடைகள் பற்றி யோசிப்பதற்கு முன்னால், நீங்கள் நிற்பது, நடப்பது மற்றும் உடல் மொழி (body language) எப்படி இருக்கிறது என்பதை கவனியுங்கள்.

  • நிற்கும் தோற்றம் முக்கியம் — நிமிர்ந்து நில்லுங்கள். கடினமாக இல்லாமல் உங்களுக்கு சௌகரியமான முறையில் நிற்கவும். சாய்ந்து நிற்பது அல்லது கால்களை இழுத்து நடப்பதை தவிர்க்கவும்.
  • நடக்கும் விதம் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும் — ஓடிக்கொண்டே நடக்க வேண்டாம். அதற்காக மிக மெதுவாகவும் நடக்க வேண்டியதில்லை. உங்களை  சுற்றியுள்ள சூழலை உணர்ந்தபடி நடக்கவேண்டும்.
  • தரையை பார்த்து நடப்பது அல்லது கைபேசியை பார்த்துக்கொண்டே நடப்பதை தவிர்க்கவும் — முகம் உயர்த்தி, கண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
  • ஒரே ஒரு சிரிப்பு கூட உங்கள் தோற்றத்தை அழகாக மாற்றும்.

2. பளிச்சென்ற உடுத்தலை விட சீரான உடைதான் முக்கியம்.

நன்றாக உடை அணிவது என்றால் அது விலை உயர்ந்ததாக இருக்க வேண்டியதில்லை. அது சுத்தமாகவும், கால சந்தர்ப்பத்திற்கு  ஏற்பவும், உங்களுக்கு பொருத்தமாகவும் இருக்க வேண்டும்.

  • எளிமையான உடைகளாக இருந்தாலும், உங்களுக்கு ஏற்ற சரியாக பொருந்தும் உடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • சலவை செய்யப்படாத உடைகள், அதிக விலையுள்ளவையாக இருந்தாலும் அது சிறப்பாக இருக்காது. 
  • உங்கள் தோல் நிறத்துக்கும், கால சூழ்நிலைகளுக்கும் ஏற்ப நிறங்களைத் தேர்ந்தெடுக்கவும்.  பேஷன் என்ற பெயரில் எதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்த வேண்டாம்.
  • மற்றவர்களை கவரவேண்டும் என்பதற்காக பளபளப்பான இறுக்கமான  ஆடைகளை அணிய வேண்டாம். உங்களுக்கு சௌகரியமான மற்றும் தன்னம்பிக்கை தரும் ஆடைகளை அணியுங்கள்.
  • நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதற்கேற்ப ஆடை அணிவது முக்கியம்.  சாதாரணமாக கல்லூரிக்கு செல்லும் நாட்களில் விழாவில் அணியும் ஆடை போல உடுத்துவது தேவை இல்லை.

மாடர்னாக இருக்கிறோம் என்று காட்டிக்கொள்வதை விட எந்த அளவு சீராக உடை அணிகிறோம் என்பதே முக்கியம்.

இது பெண் விடுதலைக்கோ  அல்லது பெண் உரிமைகளுக்கோ  எதிரானதல்ல. ஒருவர், பெண்ணோ அல்லது ஆணோ அவரின் விருப்பப்படி உடை அணிவதற்கான உரிமை உண்டு என்பது என் முழுமையான  மதிப்பும் கொண்ட கருத்து. ஆனால் இவ்வுலகம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில நேரங்களில் உங்கள் உடை தேர்வு செய்யும் விதம், தேவையில்லாத  கவனத்தை ஈர்க்கக்கூடும் என்பதை உணர்ந்து செயல்படுவது புத்திசாலித்தனம்.

பல மரபுகளில், மிதமான உடை அணிவது “கலாசாரம்” என்பதைக் காட்டிலும், மரியாதை, கண்ணியம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக மட்டும் இல்லாமல் தன்னை நம்பிக்கை உடையவராகவும் வெளிப்படுத்துவதாகும். 

நாம் நவீனமாகவும் சுய சிந்தனை கொண்டவர்களாகவும் இருக்கலாம். அதற்காக அடிப்படை அறிவையும் அறிவுரையையும் புறக்கணிக்க வேண்டியதில்லை. சீராகவும், கால சந்தர்ப்பத்திற்கேற்ப உடை அணிவது, உங்கள் தன்னம்பிக்கையை ஒரு போதும் குறைக்காது. 

3. செம்மையாக்கம் (Grooming) அனைவருக்குமே — பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் தான் 

உங்கள் தோற்றம் என்பது வெறும் உடைகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை — அது தூய்மை மற்றும் பராமரிப்பை அடிப்படையாகக் கொண்டது.
புதிய, சுத்தமான தோற்றம் என்பது விலை உயர்ந்த ஃபேஷனைவிட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

  • தலைமுடியை ஒழுங்காக வாரி வைத்திருங்கள்.
  • நகங்களை அடிக்கடி வெட்டுங்கள். 
  • தினமும் இருமுறை பல் துலக்குங்கள் — ஆம், வாய் துர்நாற்றம்  நீங்கள் பேசும் பேச்சின் மதிப்பை குறைக்கலாம்.
  • ஓர் மென்மையான வாசனை திரவியம்  அல்லது டியோடரண்ட் பயன்படுத்துங்கள் — அதிக வாசனை வேண்டாம். 
  • காலணிகள்  சுத்தமாக இருக்கட்டும் — அது உங்கள் தோற்றத்தின் ஒரு பகுதி (மிக முக்கியம்: துவைத்த காலுறைகளை பயன்படுத்துங்கள்)

பெண்களுக்கு அதிக மேக்கப் தேவையில்லை — ஒரு இயற்கையான முகம் மற்றும் ஒழுங்காக தலை வாரிய கூந்தல் போதும்.

ஆண்களும் அழுக்காக இருக்கக் கூடாது — திருத்தப்பட்ட தாடி அல்லது சுத்தமான ஷேவ் உங்களின் முழுமையான தோற்றத்தை உயர்த்தும்.

செம்மையாக்கம் (grooming) என்ன சொல்கிறது என்றால்: “நான் என்னையும், என்னைச் சந்திக்கிறவர்களையும் மதிக்கிறேன்.”

4. உங்கள் நடத்தைதான் உண்மையான தோற்றம்

நீங்கள் எப்படி நன்கு உடை அணிந்திருந்தாலும், நீங்கள் சத்தமாக, மரியாதையின்றி, சினிமா போல் கவனத்தை ஈர்க்க முயன்றால்  நீங்கள் அங்குள்ள அனைவரையும் இழந்துவிடுகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் எப்படி பேசுகிறீர்கள், அமர்கிறீர்கள், நடந்துகொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான்  உண்மையில் மற்றவர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

  • மரியாதையுடன் பேசுங்கள் — கொச்சை மொழி, புறணி பேசுதல் அல்லது அருவருப்பான பேச்சுக்களை  தவிர்க்கவும். 
  • மற்றவர்கள் பேசும் போது கவனமாக கேளுங்கள் — இது உங்கள் அறிவைக் காட்டும் ஒரே வழி. 
  • “தயவு”, “நன்றி” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துங்கள் — இது சிறியதாக தோன்றினாலும், மிகப்பெரிய தாக்கம் உள்ளவை (பொன்னான வார்த்தைகள்!)
  • அடிக்கடி உடையைத் திருத்திக்கொள்வது, கண்ணாடியில் உங்களை பார்ப்பது போன்ற பழக்கங்களை தவிர்க்கவும்.
  • அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்ளுங்கள் — உங்களின் முக்கியமானவர்களுக்கு மட்டுமல்ல,  உங்களைவிட தாழ்வான நிலையில் இருப்பவர்களிடம் கூட.

நன்றாக இருப்பது  என்பதன் அர்த்தம், அனைவரும் உங்களைப் பார்ப்பது அல்ல. அது, சரியான காரணங்களுக்காக நீங்கள் மற்றவர் நினைவில் நிலைத்திருப்பதையே குறிக்கிறது.

5. சுயமாக, நேர்த்தியாக, சிறப்பாகக் காட்சி அளித்தல் என்பது என்ன?

நன்றாக உடுத்தி, சிறப்பாகக் காட்சி அளிப்பதற்கு  நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டும் என்றோ அல்லது புதிய நாகரிகங்களை எப்போதும் பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்றோ அர்த்தம் இல்லை.

அதற்கு இவை அர்த்தம் அல்ல:

 * பிரபலமான வடிவமைப்பாளர்களின் துணிகளை அணிவது.

 * உடலின் பாகங்களையோ அல்லது தசைகளையோ வெளிப்படுத்துவது.

 * ஒவ்வொரு நாகரிக செல்வாக்கையும் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது.

 * உங்களை புத்திசாலியாகக் காட்டிக்கொள்ள மற்றவர்களை இழிவுபடுத்துவது.

உண்மையான நம்பிக்கை அமைதியாக இருக்கும். அது சத்தம் போடாது, விருப்பங்களுக்காக கெஞ்சாது, மற்றவர்களை ஒருபோதும் சிறியதாக உணர வைக்காது.

இறுதிக் கருத்து: எளிமை ஏன் எப்போதும் இன்றியமையாதது  ?

பள்ளி, கல்லூரி, வேலை அல்லது ஒரு பொதுக்கூட்டம் என எந்த இடத்திலும், உங்களைப் பற்றிய முதல் எண்ணம் நீங்கள் உங்களை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது.

நீங்கள் சீராக உடை அணிந்து, பராமரிக்கப்பட்ட தோற்றத்துடன், மரியாதையுடன், தன்னம்பிக்கையுடன் இருக்கும்போது மக்கள் தானாகவே உங்களை மதிப்பார்கள்.
அவர்கள் நீங்கள் என்ன அணிந்திருந்தீர்கள் என்பதைக் கூட மறந்து விடலாம். ஆனால், நீங்கள் அவர்கள் மீது ஏற்படுத்திய உணர்வை மறக்க மாட்டார்கள்.

அதனால், அடுத்த முறை வெளியே செல்லும் போது, “மற்றவர்கள் என்னை எந்த கோணத்தில்  பார்ப்பார்கள்” என்று எண்ணுவதற்கு பதிலாக,  “நான் அமைதியான தன்னம்பிக்கையுடன் இருக்கிறேனா என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். 

இறுதியாக, எளிமையானது எப்பொழுதும் தனித்துவமாக இருக்கும்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *

Call to action banner image
x

Lost Password