கனவு நிஜமாகவே அர்த்தமுள்ளதா? நவீன அறிவியல் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் என்ன சொல்கின்றன?

ஒரு கடற்கரையில் காலணியில்லாமல் நடந்து கொண்டிருந்தேன்.  அந்த இடம் திடீரென எனது பழைய பள்ளியாக மாறியது. என் ஆசிரியை அங்கே இருந்தார். அவருடன் நான் நீண்ட நாட்களாக பார்க்காத என் தாத்தாவும் புன்னகையுடன் வந்தார். ..

நான் கண் விழித்து  எழுந்த போது அந்த பெரிய கனவில் இது மட்டும் தான் என் நினைவில் இருந்தது. 

நீங்களும் ஒரு சில நேரங்களில் இப்படியொரு திரைப்படம் போன்ற  நீண்ட கனவு கண்டிருப்பீர்கள். ஆனால் சரியாக என்ன நடந்தது என்று நினைவில் இல்லாமல்  போயிருக்கும், இல்லையா?

இன்னொரு கனவு கொஞ்சம் பயங்கரமாக  இருந்தது. நான் நிரஞ்சனாவை ஒரு காடு போன்ற இடத்திற்கு அழைத்துச் சென்றேன். திடீரென அவளை காணவில்லை. சில எதிர்பாராத துயரமான விஷயங்கள் நடக்கத் தொடங்கின. கனவிலிருந்து விழித்த பிறகும் என்னால் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.  இது வெறும் கனவா? அல்லது ஏதோ ஒரு செய்தியா? அதன் பிறகு, உண்மையாகவே அவளை வெளியில் அனுப்பக்கூட பயமாக இருந்தது. 

நாம் எல்லோரும் ஒரு முறையாவது நாம் கண்ட கனவால் சிரித்திருக்கிறோம், அழுதிருக்கிறோம் அல்லது எதிர்காலம் குறித்த கவலையுடன் விழித்திருக்கிறோம். 

உண்மையிலேயே கனவுகளுக்கு அர்த்தம் இருக்கிறதா? அவை வெறும் மூளையின் சீரற்ற செயலா? அல்லது நம்முடைய உணர்வுகள், பயங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பா?

அறிவியல் மற்றும் பாரம்பரியம் இரண்டையும் நாம் ஆய்வு செய்வோம்.

பல நூற்றாண்டுகளாக கனவுகள் நம்மை ஆச்சரியப்படவைக்கும் மற்றும் குழப்பத்துக்குள்ளாக்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளன. சிலர் அவை வெறும் மூளையின் செயல்பாடாக நினைக்கிறார்கள். வேறு சிலர், அவை தெய்வீகக் கூறுகள், நம்முடைய ஆழ் மனதின் செய்திகள், அல்லது இறந்துவிட்ட நபர்களிடமிருந்து வரும் தொடர்புகளாக நம்புகிறார்கள். 

பெரும்பாலும் துரித கண் அசைவு (Rapid Eye Movement) நேரத்தில்  தான் கனவுகள் நிகழும். இந்த நேரத்தில் மூளை மிகவும் வேகமாக செயல்படும். ஆனால் உடல் அமைதியாக இருக்கும். இது குறித்து அறிவியலாளர்கள் பல சிறந்தக் கோட்பாடுகளை முன்வைத்துள்ளனர்.  

  1. உணர்ச்சி செயலாக்கம் மற்றும் நினைவகத் தொகுப்பு
    கனவுகள் என்பது உங்கள் மூளை தினமும் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் தகவல்களை செயலாக்கும் ஒரு விதமாகும். இது உங்கள் மனது தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்வது போல எதை சேமிக்க வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்று தீர்மானிக்கிறது. 

    “மூளை நாள் முழுக்க சேகரித்த  தகவல்களை ஆய்வு செய்கிறது. அதன் பிறகு முக்கியமான தகவல்களை மட்டும் எடுத்துக்கொண்டு, தேவை இல்லாததை அகற்றுகிறது.“ – சில ஆராய்ச்சியாளர்கள் இதை ‘மூளைச் சுத்தம் செய்தல்”(Brain Housekeeping) என்று அழைக்கலாம் என கூறுகின்றனர்.

    சுவாரஸ்யமாக இருக்கிறது, இல்லையா?

    இந்நிலையில் நம் மூளையின் அமிக்தலா(amygdala) (உணர்வுகளை கட்டுப்படுத்தும் பகுதி) மற்றும் ஹிப்போகாம்பஸ்(hippocampus) (நினைவகத்துடன் தொடர்புடைய பகுதி) அதிகம் செயல்படுகின்றன. அதனால் தான் கனவுகள் அதிக உணர்வுப் பூர்வமாகவும், பல நேரங்களில் நிஜ நினைவுகளோடு சற்றே தொடர்பு உள்ளது போலவும் தோன்றுகின்றன, ஆனால் அவை நிஜ உலகத்தின் வழக்கத்திற்கு கட்டுப்பட்டவை அல்ல.

    2. பிரச்சனைகள் தீர்ப்பதும், படைப்பாற்றல் சிந்தனையும்
    நாம் தூங்கும் போதும், குறிப்பாக கனவுகள் அடிக்கடி வரும் கட்டங்களில், நம் மூளையின் முடிவெடுக்கும் பகுதி சற்று மந்தமாகிவிடுகிறது. இதனால் நம் கற்பனைத் திறனுக்கு சுதந்திரமாகச் சுற்றித் திரியும்  வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் தான் கனவுகள் சில சமயம் விதி முறை இல்லாமலும்,  அதே சமயம் மிகவும் படைப்பாற்றல் கொண்டவையாகவும் இருக்கின்றன. தர்க்கம் (Logic) இல்லாத சூழலில், நம் மூளை சில வித்தியாசமான, யாரும் எதிர்பாராத தொடர்புகளை உருவாக்குகிறது. அதனால்தான் சில நேரங்களில் கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த யோசனைகளை கனவில் பெறுகிறார்கள்.

    துரித கண் அசைவு (Rapid Eye Movement) தூக்க நேரத்தின் போது ப்ரீஃபிரண்டல் கார்டெக்ஸ்(prefrontal cortex) (தர்க்கம் (logic), முடிவெடுக்கும் திறன், சுய உணர்வு ஆகியவற்றுக்குப் பொறுப்பான பகுதி) குறைந்த அளவில் செயல்படுகிறது. இதனால் தர்க்கத் திறனும், விமர்சன உணர்வும் தடைபடுவதால், கனவுகள் மிகவும் தடைபடாத, விசித்திரமான மற்றும் சுதந்திரமான சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன.

    3. உணர்ச்சி குணப்படுத்தல்
    நீங்கள் ஏதேனும் ஒரு வலியான நிகழ்வை மீண்டும் கனவில் அனுபவித்திருக்கிறீர்களா? கனவுகள், நம் உள்ளுணர்வுகளை சமாளிக்க ஒரு நெகிழ்வான இடமாக செயல்பட்டு, மன அழுத்தம், துக்கம் அல்லது பயங்களை குறைக்கும் ஒரு பிம்பத்தன்மை கொண்ட முறையில் செயல் படுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வுகள் சில தெய்வீக அனுபவங்களில் நடந்ததாக நான் கேட்டிருக்கிறேன்.

    பாம்பன் சுவாமிகள் என்ற ஒரு சித்தர், தன்னுடைய காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரது  கனவில் முருகப்பெருமான் ஒரு மயிலாக வந்து அவரது காலை எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் குணமாக்கியதாக கூறப்படுகின்றது. இதைப் போல சில கனவுகள் உண்மையில் நம்மை உளமாகவும் உடலாகவும் குணப்படுத்தும் வகையில் செயல்படக்கூடும்.

    சில நேரங்களில், நீங்கள் யோசித்திருப்பீர்கள் — “ஏன் கனவுகள் இவ்வளவு விசித்திரமாக இருக்கின்றன?” இதற்கான காரணம், தர்க்கம் பேசும் உங்கள் மூளையின் பகுதி (ப்ரீஃபிரண்டல் கார்டெக்ஸ்) கனவுகளின் போது பெரும்பாலும் செயல்படாமல் இருக்கும். அதே நேரத்தில், உங்கள் உணர்ச்சி மையங்கள் முழுமையாக செயல்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால்தான் பெரும்பாலும் கனவுகள் நாடகத்தன்மை வாய்ந்தவை, நிஜ வாழ்வில் நடக்காதவை அல்லது சற்றே குழப்பமானவை போலத் தோன்றும்.  ஆனால் அதே நேரத்தில், கனவுக்குள் இருக்கும்போது அந்த நிகழ்வுகள் முழுவதும் அர்த்தமுள்ளதாகவே தோன்றும்.

    உதாரணத்திற்கு, ஒரு பூனை உங்கள் அம்மாவின் குரலில் பேசுகிறதா? நீங்கள் கண் விழிக்கும் வரை இது மிகவும் சாதாரண விஷயம் தான்!

    இப்போது நம் பாரம்பரியம் மற்றும் முன்னோர்களின் நம்பிக்கைகள் குறித்து ஆராயலாம். கனவுகள் என்பது வெறும் மனக் குழப்பங்கள் அல்ல என்று மக்கள் நீண்ட காலமாக நம்பி வருகிறார்கள். அவை அடையாளங்கள், சின்னங்கள் அல்லது வேறு உலகத்திலிருந்து வரும் செய்திகளாகவே (ஆன்மீகமோ, முன்னோர்களோ, மன உளவியல் உணர்வுகளோ) எடுத்துக் கொண்டனர்.

    பரவலாக நம்பப்படும் கனவுகளின் பலன்கள் சில இங்கே  கொடுக்கப்பட்டுள்ளன.

    • பாம்பு காண்பது – பல சமயங்களில் மறைக்கப்பட்ட பயங்கள் அல்லது மாற்றத்தைக் குறிக்கிறது. சில பாரம்பரியங்களில், பாம்பு கடிக்கிறது என்பது ஒரு நல்ல அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. இது மனதை புதுப்பித்தல்  அல்லது விழிப்புணர்வைக் குறிக்கும்.
    • இறந்த ஒருவர் கனவில் தோன்றுவது – பெரும்பாலும் அவர்கள் உங்களைச் சந்திக்கவோ, ஆசிகளை வழங்கவோ  வந்ததாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது தவறான விஷயமல்ல.
    • நீர் (கடல், ஏரி போன்ற ஆழமான அல்லது மங்கலான நீர்) சூழ்ந்திருப்பது – பெரும்பாலும் மன அழுத்தம் அல்லது வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

    நரம்பியல் அறிவியல் (Neuroscience) உருவாகும் முன்பே, கனவுகள் தெய்வீகமான செய்திகளாக, எச்சரிக்கைகளாக அல்லது எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளின் ஒரு சின்னமாகக் கருதப்பட்டன. நம் தமிழ் பண்பாட்டு சமூகத்திலும், கனவு என்பது ஒரு முக்கியமான அடையாள நிகழ்வாகவே எடுத்துக்கொள்ளப்பட்டன.

    நீங்கள் உளவியல் விஞ்ஞானத்தை அல்லது உங்கள் பாட்டியின் கனவுப் பொருள் விளக்கத்தை நம்பினாலும், ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்.

    கனவுகள் முக்கியமானவை, ஏனெனில் அவை உங்கள் உள்ளத்தின் ஆழமான பகுதியில் இருந்து வருகின்றன.  நீங்கள் அன்றாட வாழ்க்கையின் ஓட்டத்தில் எப்போதும் சந்திக்க முடியாத அந்த உள் உணர்வுகள் கனவுகளாக வருகின்றன. 

    ஆம், கனவுகள் பெரும்பாலும் நம் மனதின் ஆழ்ந்த சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் விருப்பங்களை பிரதிபலிக்கின்றன. நாம் விழித்திருக்கும்போது ஏற்றுக்கொள்ளாத உண்மைகளை கூட, சில நேரங்களில் நாம் காணும் கனவுகள் அந்த  உண்மைகளை ஏற்றுகொள்ளச் செய்து, அதன் மூலம் நமக்கு தெளிவையும், வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. நம் விழிப்புணர்வு மற்றும் மனம் புறக்கணித்து விட்ட உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் கனவுகள் நம்மை உணரச் செய்யும்.

    அதனால், அடுத்த முறை நீங்கள் ஒரு வியத்தகு அல்லது விசித்திரமான கனவிலிருந்து விழிக்கிறீர்கள் என்றால், அதைச் சாதாரணமாக கருதிப் புறக்கணித்து விடாதீர்கள்.  சற்று நிதானமாக யோசிக்கவும். ஏனெனில், அந்தக் கதையில், நீங்கள் உணராமல் மறைத்துவைத்த ஒரு உண்மை இருக்கக்கூடும்.

    Leave A Comment

    Your email address will not be published. Required fields are marked *

    Call to action banner image
    x

    Lost Password