செம்மைவாதம் (Perfectionism): வேலைத்திறன் மற்றும் மனஅமைதிக்கு ஒரு மறைமுகத் தடை
உங்களுக்குத் தெரியுமா, செம்மைவாதத்திற்கு ஒரு மறைமுகமான விலை உண்டு! உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? அல்லது நீங்கள், “இவள் தவறு செய்கிறாள்” என்றோ அல்லது “இவளுக்கு என்ன ஆகிவிட்டது?” என்றோ நினைக்கிறீர்களா?
உங்களின் இந்த கேள்வி எனக்கு புரிகிறது. நானும் முன்பு சிறப்பாக ஒரு செயலை செய்து முடிப்பது ஒரு பலம், உயர்ந்த தரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் அது ஒரு அடையாளம் என்று நம்பினேன். ஆனால், காலப்போக்கில், எல்லாவற்றையும் “சரியாக” செய்ய வேண்டும் என்ற இந்த நிரந்தரத் தேவையானது எனக்கு எப்போதும் உதவியதில்லை என்பதை நான் உணர ஆரம்பித்தேன். உண்மையில், இது பல சமயங்களில் ஏதேனும் ஒரு புதிய செயலை ஆரம்பிப்பதாக இருந்தாலும், அந்தச் செயலை ரசிப்பதாக இருந்தாலும் அல்லது எதையாவது விட்டு விடுவதாக இருந்தாலும் என்னை இன்னும் கடினமாக்கியுள்ளது.
“நான் ஒரு செம்மைவாதி” என்று பெருமையுடன், ஒரு கௌரவப் பட்டம் போல மக்கள் சொல்வதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். அது பாராட்டத்தக்கது போலத் தோன்றுகிறது. அதாவது, ஒரு வலுவான கொள்கைகளைக் கொண்ட ஒருவர், ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி, அதற்கான வேலைகள் சரியான முறையில் நடக்க வேண்டும் என்று விரும்புவது போலத் தோன்றும்.
ஆனால் ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம்: செம்மைவாதம் உண்மையில் ஒரு பலம்தானா? அல்லது அது ஒரு மறைமுகமான சுமையா? செம்மைவாதத்திற்கு ஒரு மறைமுகமான விலை உண்டு என்பதை உங்களால் பார்க்க முடிகிறதா?
ஆம், செம்மைவாதம் என்பது சிறந்து விளங்க முயற்சிப்பது (Excellence) போன்றது அல்ல. சிறந்து விளங்க முயற்சிப்பது என்பது உங்களால் முடிந்தவரை சிறப்பாக மற்றும் ஆரோக்கியமாக செய்ய விரும்புவது ஆகும். அது உங்களை வளரவும், கற்றுக்கொள்ளவும், மேம்படவும் தூண்டுகிறது.
ஆனால் செம்மைவாதம் என்பது உத்வேகத்திலிருந்து வருவதல்ல. அது பயத்திலிருந்து வருகிறது. அதாவது நம் தோல்வி விமர்சிக்கப்பட்டு விடுமோ, நாம் போதுமான அளவு சிறந்தவர்கள் இல்லையோ என்ற பயத்தில் வருகிறது.
பயத்திற்கு ஒரு விலை உண்டு: நீங்கள் செய்யப் போகும் விஷயம் முழுமையாக இருக்கும் என்று நம்பிக்கை இல்லையெனில், அதைத் தொடங்க தயங்குகிறீர்கள். ஒரு வேலையை முடிக்காமல், அதில் அடிக்கடி மாற்றங்களினாலும் திருத்தங்களினாலும் தாமதப்படுத்துகிறீர்கள். அந்த குறிப்பிட்ட வேலை திட்டமிட்டபடி செல்லாவிட்டால், விரக்தி, பதற்றம், அல்லது தன்னம்பிக்கை இழப்பு போன்ற உணர்வுகள் உங்களை வாட்டுகின்றன.
“உயர்ந்த தரநிலை” (high standards) என்று தொடங்கிய ஒரு விஷயம், இறுதியில் சோர்வு, வேலையை தள்ளிப்போடுதல், அல்லது எதையும் தொடங்காமை என முடிகிறது.
செம்மைவாதத்துடன் எனது தனிப்பட்ட போராட்டம்
எனது செம்மைவாதம் என் வேலையை மட்டும் பாதிக்கவில்லை. அது என் வாழ்க்கையின் எங்கேயோ ஒரு மிகச் சிறிய மூலையில் பரவியுள்ளது என்பதை நான் உணர்ந்துள்ளேன்.
என் சிறு வயதில், நான்கு மலை தாயம் (Ludo) அல்லது பரமபதம் போன்ற விளையாட்டுகளை நான் தவிர்த்துவிடுவேன். அதற்குக் காரணம் அவை எனக்கு பிடிக்காததால் அல்ல. நான் தோற்றுவிடுவேனோ என்ற பயமே காரணம். நான் தோற்கப் போகிறேன் என்று தெரிந்தால், விளையாட்டை முற்றிலுமாக நிறுத்துவதற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பேன். சில நேரங்களில் மற்றவர்கள் விளையாடுவதையும் மேற்கொண்டு தொடர விடாமல் செய்வேன். இவை அனைத்தும் விளையாட்டைப் பற்றியது அல்ல; அந்த விளையாட்டில் என்னால் வெற்றி பெற முடியாமல் போவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இப்போதும், நான் என் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ சீட்டு விளையாடத் தயங்குகிறேன். நான் சாக்குப்போக்குகளைச் சொல்கிறேன், ஆனால் உண்மை என்னவென்றால் அந்த பழைய பயம் இன்னும் என்னிடமே இருக்கிறது. சில சமயங்களில், “இது ஒரு விளையாட்டு தானே, போய் விளையாடு” என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். அப்படியே செய்வேன். ஆனால் என் ஆழ் மனதில், நான் வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். நான் வெல்லவில்லை எனில், என் மனம் அமைதியற்றும் தோல்வியுற்றதாகவும் உணர்வேன்.
அதே மனநிலை எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் மிகவும் விரும்பி உருவாக்கும் யூடியூப் வீடியோவிலும் தொடர்ந்தது. இந்த வீடியோ உருவாக்கம் எனக்கு பெரும் மனப் போராட்டமாக மாறியது. நான் ஒரு வீடியோவைப் பதிவு செய்வேன். பிறகு மறுபடியும் பதிவு செய்வேன். ஒரு உச்சரிப்பு சரியாக இல்லை, அல்லது என் குரல் சரியான தொனியில் இல்லை, அல்லது ஒரு வாக்கியம் நான் விரும்பியபடி வரவில்லை என்று உணர்ந்ததால் இவ்வாறு செய்தேன். உற்சாகத்துடன் தொடங்கிய இந்த முயற்சி மெதுவாக விரக்தியாக மாறியது. இறுதியில், நான் முற்றிலுமாக அதை நிறுத்திவிட்டேன். இதற்கு காரணம் சரியானதாக இல்லாத எதையும் பதிவிட என் மனம் என்னை அனுமதிக்கவில்லை.
உண்மையில் இந்த செம்மைவாதம், தரநிலைகள் என்ற என்னுடைய இந்த இயல்புக்கு நான் பரிசாக பெற்றது சோர்வும் தன்னம்பிக்கையின்மையும் மட்டுமே ஆகும்.
செம்மைவாதம்: அமைதியான சுய-தடையாக்கம்
முதல் பார்வையில், செம்மைவாதம் ஒரு பலமாகத் தோன்றலாம். எல்லாவற்றையும் சரியாகச் செய்ய யார் தான் விரும்ப மாட்டார்கள்? ஆனால் உண்மையில், இது மிக நுண்ணிய வடிவிலான சுய-தடையாக்கம் (Self-sabotage) ஆகும். அதாவது தன்னைத் தானே தடுத்துக்கொள்ளுதல் அல்லது தோற்கடித்துக்கொள்ளுதல் ஆகும்.
நீங்கள் தொடர்ந்து சரியான பதிப்பிற்காகக் காத்திருக்கும்போது, செயலைத் தாமதப்படுத்துகிறீர்கள். உங்களைப் பற்றி நீங்களே இரண்டாவது முறையாக யோசிக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள், மறுபடியும் பதிவு செய்கிறீர்கள். உங்கள் வேலை போதுமானதாக இல்லை என்று பயந்து அதை மறைக்கிறீர்கள். காலப்போக்கில், நீங்கள் முற்றிலும் அந்த வேலையை நிறுத்திவிடுகிறீர்கள். இதற்கு காரணம் நீங்கள் சோம்பேறி அல்லது திறமையற்றவர் என்ற பொருள் அல்ல. உங்களுடைய செம்மைவாதம் என்ற கொள்கை உங்களை மேற்கொண்டு அந்த வேலையை செய்ய விடாமல் தடுத்து விட்டது.
இப்படியாக, செம்மைவாதம் என்பது உங்களுக்கும் உங்கள் திறமைக்கும் இடையே நீங்களே கட்டும் ஒரு தடுப்பு சுவராக மாறுகிறது.
உங்கள் செம்மைவாதம் சுய-தடையாக்கமாக மாறி வருவதற்கான அறிகுறிகள்
- “நான் இன்னும் தயாராக இல்லை” என்று சொல்லி ஒரு காரியத்தைச் செய்வதைத் தாமதப்படுத்துகிறீர்கள்.
- நீங்கள் தொடர்ந்து திருத்தம், மாற்றம், மறுசெயல் செய்து கொண்டே இருப்பீர்கள் — ஆனால் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
- தீர்ப்பு அல்லது விமர்சனத்திற்கு பயந்து உங்கள் வேலை அல்லது யோசனைகளைப் பகிர்வதைத் தவிர்க்கிறீர்கள்.
- முக்கியமான காரியங்களைத் தள்ளிப்போடுகிறீர்கள் — சோம்பேறித்தனத்தினால் அல்ல, தோல்வியடைய பயப்படுவதால்.
- உங்களுக்கு விருப்பமான விஷயங்கள் (திட்டங்கள், பொழுதுபோக்குகள், ஏன் விளையாட்டுகள் கூட) சரியாக நடக்கவில்லை என்றால், அவற்றிலிருந்து விலகிச் செல்கிறீர்கள்.
- “என்னால் அதைச் சரியாகச் செய்ய முடியாவிட்டால், அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது” என்று அடிக்கடி நினைக்கிறீர்கள்.
முழுமையில்லாமல் இருந்தாலும் முழுமையாய் தோன்ற கற்றுக்கொள்வது
இப்பொழுதும் விளையாட்டுகள், படைப்புத்திறன் மற்றும் வாழ்க்கையில் செம்மைவாதம் என்னை இறுக்கமாகப் பிடித்திருந்த அந்தப் பிடியை விட கற்றுக்கொண்டிருக்கிறேன். அது எளிதல்ல. இப்பொழுதும் எனக்குள் ஒரு குரல், “இன்னும் சிறப்பாகச் செய். பிழையில்லாமல் இரு” என்று மெதுவாகக் கூறுகிறது.” ஆனால் இப்போது, நான் ஒரு நிமிடம் நின்று என்னைக் கேட்டுக் கொள்கிறேன்: “இது உண்மையில் செம்மையாக இருப்பதற்கானதா? இல்லை, நான் செம்மையாக இருப்பது போல் தோன்றுவதற்கானதா?”
மெல்லமெல்ல, நான் செம்மையற்ற முறையில் வெளிப்படுத்த எனக்கு நானே அனுமதி கொடுக்க கற்றுக்கொள்கிறேன். ஒரு விஷயத்தை உருவாக்குவதற்கும், பகிர்வதற்கும், சிரிப்பதற்கும், தோற்பதற்கும், மற்றும் எல்லாம் “சரியாக” இருக்க வேண்டும் என்று விரும்பாமல் வெறுமனே இருப்பதற்கும் கற்றுக்கொள்கிறேன்.
அந்த இடத்தில், நான் பூரணத்தை விட மிக அர்த்தமுள்ள ஒன்றைக் கண்டேன். அது அமைதி, சுதந்திரம், மற்றும் உண்மைத்தன்மையாகும்.
செம்மைவாதம் ஒரு காலத்தில் கட்டுப்பாடு போல் தோன்றியது. ஆனால் இப்போது, அது மகிழ்ச்சி, படைப்பாற்றல் மற்றும் தொடர்பிலிருந்து என்னைத் தடுத்து நிறுத்தி, ஒரு அமைதியான சுய-சேதாரமாக இருந்தது என்பதை நான் உணர்கிறேன். செம்மைவாதத்தை விட்டுவிடுவது எளிதல்ல. ஆனால்
ஒவ்வொரு முறையும் நாம் பரிபூரணத்தை விட முன்னேற்றத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, நாம் வளர்கிறோம். நாம் வாழ்கிறோம். நாம் முழுமையடைகிறோம். ஒருவேளை, அதிசயம் நிறைந்த உண்மையான மகிழ்ச்சி அங்கே இருக்கலாம்.
