நீங்கள் ஏன் தும்முகிறீர்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு “அச்சூ!”வுக்குப் பின்னால் உள்ள ஆச்சரியமான அறிவியல்.

சில நேரங்களில் சத்தமாக, சில நேரங்களில் தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு முறை, தும்மல் என்பது மிகவும் பொதுவான விஷயம்.

இந்த  தும்மல் வெறும் ஒரு தன்னிச்சையான செயல் (ரெஃப்லெக்ஸ்) மட்டுமல்ல, அது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் செயலும் கூட. குறிப்பாக நீங்கள் லிப்டில் வாயையும் மூக்கையும் மூடாமல் தும்மி இருந்தால் அந்த தருணம் இந்த தும்மல்  மற்றவர்களிடம் ஒருவிதமான முகச்சுளிப்பு அல்லது  எதிர்வினை கொண்ட தாக்கத்தை ஏற்படுத்துவதை கண்டிருப்பீர்கள். 

சில கலாசாரங்களில் தும்மல் ஒரு அதிர்ஷ்டமற்ற செயல் என பார்க்கப்படுகிறது; மக்கள் அதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் முன் சிறிது நேரம் நின்று செல்வார்கள் அல்லது வெளியே செல்வதையே தவிர்ப்பார்கள். சில சமயங்களில், ஒரு நல்ல நிகழ்வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது யாராவது தும்மினால் அந்த யோசனையையே மறுபரிசீலனை செய்யலாம் என்று தோன்றும்.  இல்லையா?

மற்ற சில கலாச்சாரங்களில், ஆசி உண்டாகட்டும் என்று சொல்வார்கள். இது ஒரு பழமையான பழக்கம், ஏனெனில் தும்மல் ஆன்மாவை விடுவிக்கும் அல்லது நோயை வரவேற்கும் என்று நம்பப்பட்டதாம். 

ஆனால் சமூக அர்த்தத்திற்கு அப்பால், தும்மல் என்பது உங்கள் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பாகும். இது எரிச்சலூட்டும் பொருட்களை அகற்றவும், உங்கள் சுவாச அமைப்பைப் பாதுகாக்கவும் பயன்படும் ஒரு விரைவான, சக்திவாய்ந்த வழியாகும்.

உங்களில் யாராவது, உங்கள் தும்மலை நடுவில் நிறுத்திவிட்டு, “இது ஏன் நடக்கிறது?” என்று யோசித்திருக்கிறீர்களா?

சரி, தும்மல் என்றால் என்ன?

தும்மல் என்பது உங்கள் மூக்குப் பாதைகளைத் தொந்தரவு செய்த அனைத்தையும் வெளியேற்றுவதற்காக உங்கள் உடலில் இயற்கையாக உள்ள ஒரு வழியாகும். இது உங்கள் மூக்கிலிருந்து உங்கள் மூளைக்கு தூசி, மகரந்தம், புகை அல்லது ஒரு வலுவான வாசனை திரவியம் போன்ற ஏதாவது ஒன்று இருப்பதாக சமிக்ஞை செய்வதன் மூலம் தொடங்குகிறது.

ஒரு நொடிக்குச் குறைவான அந்த தருணத்தில் நீங்கள் “அச்சூ!” என்று தும்மும் போது, உடலில் என்ன நடக்கிறது தெரியுமா?

உங்கள் இடுப்புத்தசைகள் (diaphragm) மற்றும் மார்பு தசைகள் திடீரெனச் சுருக்கப்படுகின்றன. உங்கள் குரல் நாண்கள்  மூடப்படுகின்றன. நீங்கள் ஆழமாக மூச்சை இழுத்து… அச்சூ! என்று தும்மும் போது அந்த வாயுகாற்று மணிக்கு 100 மைல் வேகத்தில் வெளியேறி, உங்கள் மூக்குப் பாதைகளைத் தொந்தரவு செய்து அனைத்தையும் வெடிக்கச் செய்கிறது.

ஆம், இது உங்கள் உடலில்  அனாவசியமாக நுழையும் நச்சுகளைத் தடுக்க, இயற்கையாகவே அமைந்துள்ள ஒரு வலிமையான மற்றும் ஆச்சரியமான பாதுகாப்பு முறை. 

எந்த ஒரு விஷயமானாலும் நமக்கு  ‘என்ன’ என்ற கேள்விக்குப் பிறகு ஏன் இப்படி நடக்கிறது என்ற வினா எழும். 

நாம் ஏன் தும்முகிறோம்

பொதுவாகத் தும்மலை தூண்டும் காரணங்கள் உடல் மற்றும் சுற்றுப்புறச் சூழலால் ஏற்பட்டவையாகும். உதாரணமாக:

  • அலர்ஜிகள் (மகரந்தம், செல்லப்பிராணிகளின்  முடி, பூஞ்சை, தூசி, பூச்சிகள்),
  • தொற்று நோய்கள் (ஜலதோஷம், காய்ச்சல், சைனஸ் தொற்று),
  • வலிமையான வாசனை (வாசனை திரவியங்கள், சுத்தம் செய்யும் பொருட்கள், புகை),
  • திடமான வெப்பநிலை மாற்றங்கள் (சூடான இடத்திலிருந்து குளிரான இடத்திற்கு மாறும் போது),
  • மிளகு, மிளகாய் போன்ற மசாலா பொருட்கள்  (சிறிதளவு நுகர்ந்தால் கூட).

இதோ மற்றொரு வியப்பு  அளிக்கும் தும்மலுக்கான காரணம் — தீவிர வெளிச்சம் ஆகும்.
வியப்பா? நானும் இதை முதன்முறையாகக் கேள்விப்பட்டபோது ஆச்சர்யப்பட்டேன்.  அதன் பெயர்  ஒளி தும்மல்  (Photic Sneeze Reflex). 

நீங்கள் எப்போதாவது வெயிலுக்கு வெளியே சென்றவுடன் தும்மியதுண்டா? நீங்கள் மட்டும் அல்ல! மூன்று பேரில் ஒருவர் இந்த “ஒளி தும்மலை ”அனுபவிக்கிறார்கள். இது ஒரு விசித்திரமான மரபுக் குணம், இதில் தீவிரமான வெளிச்சம் தும்மலை தூண்டும். இது ஒரு அபாயமற்ற, சுவாரஸ்யமான, இன்னும் அறிவியலுக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

அறிவியலாளர்கள் கண் மற்றும் மூக்கு இடையிலான நரம்புத் தொடர்புகள் குழப்பமாகத் தூண்டிக் கொள்வதால் இது நிகழலாம் என நம்புகிறார்கள். ஆனால் இதன் பெயரைத் தெரியாமலேயே நாமும் இதைப் பலமுறை அனுபவித்திருக்கக்கூடும்.

நீங்கள் எப்போதாவது தும்மலைத் தடுக்க/ கட்டுப்படுத்த முயற்சி செய்திருக்கிறீர்களா?
(ஒரு நல்ல/மங்களகரமான நிகழ்ச்சி நடக்கும்போது, தும்மல் வருவது போல் உணர்ந்தால் அதை கட்டுப்படுத்த நீங்கள் போராடி இருப்பீர்கள்). அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றீர்களா? என்றால் பெரும்பாலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் தும்மல் என்பது ஒரு “reflex”, அதாவது தானாகவே உடலில் நடைபெறும் இயற்கையான ஒரு அனிச்சை செயல்.  ஒருமுறை இது துவங்கியதும், உங்கள் உடல் (மேலே குறிப்பிட்டது போல) மின்னல் வேகத்தில்  அதை செயல்படுத்துகிறது. இந்த தும்மலை  நடுவில் நிறுத்துவது என்பது கிட்டத்தட்ட அசாத்யம். அதனால்தான் நம்மால் தும்மலை பாதியில்தான் நிறுத்த முடியவில்லை.

மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்  நீங்கள் கண்களை திறந்தபடி தும்ம முடியாது.
இதைக் கவனித்திருக்கிறீர்களா? இயற்கையாகவே தும்மும்போது உங்கள் கண்கள் மூடிக்கொள்ளும். இதன் மூலம் தும்மலினால் ஏற்படும்  அழுத்தத்திலிருந்து உங்கள் கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. 

பொதுவாக தும்மல் தீங்கற்றதுதான். ஆனால், அது தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் ஏற்படுகிறதா? அல்லது கண்ணில் அரிப்பு, மூக்கில் நீர் வடிதல், உடல் சோர்வு ஆகியவை இணைந்துள்ளதா? அது உங்கள் அன்றாட வாழ்க்கையையே பாதிக்கிறதா?

அப்படியெனில், அது அலர்ஜி, சைனஸ் பிரச்சனை, அல்லது மூச்சுக் குழாய் தொற்று போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டக்கூடும். காய்ச்சல், உடல்வலி, அல்லது கபம்/கோழை ஆகியவற்றுடன் தும்மல் வந்தால், அது தீவிரமான நிலையை குறிக்கலாம்.

தும்மல் வாரக்கணக்கில்  நீடிக்கிறது மற்றும் உடல்நிலை மோசமாகிறது என்றால், ஒரு மருத்துவரையோ அல்லது அலர்ஜி நிபுணரையோ அணுகுவது நல்லது.

என் தோழியொருவர் தொடர்ச்சியாகத் தும்மும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். ஒருமுறை தும்மல் துவங்கினால் அவரால் நிறுத்த முடியவில்லை. ஆனால், அவர் தும்மலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டார்.

இதோ அவர் சொன்ன வழிமுறைகள்:

  • அலர்ஜி ஏற்படுத்தும் காரணங்களை அடையாளம் கண்டறிந்து, அவை ஏற்படாதவாறு கவனம் செலுத்துதல்
  • மூக்கை ஈரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க, உப்பு சேர்க்கப்பட்ட நாசி ஸ்ப்ரே (saline nasal spray) பயன்படுத்துதல்
  • மகரந்த காலங்களில் ஜன்னல்களை மூடி வைத்தல்
  • வீட்டில் அடிக்கடி வரும் தூசிகளை சுத்தம் செய்தல் அல்லது வாக்யூம் செய்தல்
  • வீட்டில் காற்றுத் தூய்மை செய்யும் கருவிகளை (air purifier) பயன்படுத்துதல்
  • தேவையெனில், மருத்துவருடன் ஆலோசித்து அலர்ஜிக்கு எதிரான மாத்திரைகள் (antihistamines) எடுத்தல்

முடிவில் ஒன்றுஆனால் மிக முக்கியமான ஒன்று. தும்மும்போது வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுங்கள்.

தும்மல் உங்கள் உடலின் பாதுகாப்பு செயல்முறையாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் கிருமிகளை விரைவாக மற்றவர்களுக்கு பரப்பவும் செய்கிறது.

எப்போதும்:

  • மெல்லிழைக் காகிதம் (tissue paper) அல்லது உங்கள் முழங்கையின் உட்புறத்தில் (elbow) தும்முங்கள்
  • பின்னர் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.
  • கைகளில் நேரடியாகவோ அல்லது வெற்று காற்றிலோ தும்ம வேண்டாம்.
    (நாம் குளிர் சாதன காரில் பயணம் செய்த போது அருகில் அமர்ந்த நண்பர் கடும் சளி-இருமல் காரணமாக  அவர் மூக்கையும் வாயையும் மூடாமல் வெற்று காற்றில் ஒரு பெரிய தும்மல் போட்டு அதை நீங்கள் சங்கடத்துடன் அனுபவித்திருக்கலாம்)

அடுத்த முறை நீங்கள் அமைதியான அறையில் திடீரெனத் தும்மினால், பயப்பட வேண்டாம். உங்கள் உடல் உங்கள் மூச்சுப் பாதையைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைக்க கடினமாக வேலை செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *

Call to action banner image
x

Lost Password