நாம் அறியாத அல்லது மறந்து போன கருநொச்சி!
ஒரு சிறிய செடியை களைச்செடி என்று நினைத்து பிடுங்கப்போகும்போது, பாட்டி சொன்னாங்க:
“அது கருநொச்சி டா. அது இருக்கட்டும் – அந்த பெட்டியில் இருக்கும் பாதி மாத்திரைகளைக் காட்டிலும் இது மேல்!”
ஆம், கருநொச்சி ஒரு எளிமையான தோட்டச் செடி மட்டும் இல்லை.
இது ஒரு மருந்து, பூச்சிக்கொல்லி, வீட்டு வைத்தியத்திற்கான சிறந்த மூலிகை.
இந்த மறந்துபோன வீட்டுத் தோட்ட மருத்துவரின் மருத்துவ பயன்களையும், பாரம்பரியமான பயன்பாடுகளையும் இங்கே பகிர விரும்புகிறேன்.
நான் சிறுவயதில், ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் பாட்டியின் வீட்டுக்கு போவேன். ஒரு தடவை, வீட்டுப் பின்தோட்டத்தில் பாட்டியுடன் செடிகளைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தேன். அப்போது தான் மேலே சொன்ன நிகழ்வு நடந்தது!
கருநொச்சி (Vitex negundo), அல்லது சீன சாஸ்ட் ட்ரீ (Chinese chaste tree) என்று அழைக்கப்படும் இந்த மூலிகை, தென்னிந்திய வீட்டுப் பின்தோட்டங்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு மருத்துவ செடி.
இது சுகாதாரத்தை காக்கவும், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட காரணங்களுக்காகவும் வீட்டில் வளர்க்கப்படுகிறது.
நான் கூட என் வீட்டின் வாசலில் ஒன்றை வைத்திருக்கிறேன்!
I. இயற்கையான பூச்சிக்கொல்லி:
கருநொச்சி இலைகளில் உள்ள வாசனைக்கொண்ட எண்ணெய்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகளை விலக்கக்கூடிய தன்மையுடன் இருக்கின்றன.
பயன்படுத்தும் முறை:
- சில உலர்ந்த கருநொச்சி இலைகளை எடுத்து, சாம்பிராணி தூபம் போடும் வட்டிலில் தூவி தூபம் போட்டால், அதில் வரும் புகைக்கு கொசுக்கள் மற்றும் பூச்சிகள் வராது. அந்த புகையை மாலை நேரங்களில் அறைகளிலும் வீட்டை சுற்றி உள்ள இடங்களிலும் பரவ விடவும்.
மழை காலங்களில் குறிப்பாக மாலை நேரத்தில் கொசுக்கள் யுத்தம் செய்ய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் இந்த புகையை அன்றாடம் பயன்படுத்தலாம்.
பாட்டி ஒரு மண் குடத்தில் ஒரு கைபிடி உலர்ந்த கருநொச்சி இலைகளை போட்டு எரிப்பார்கள். புகை அடர்த்தியாக பரவும் – ஆரம்பத்தில் சற்று கடுமையாக இருந்தாலும், கொசுக்கள் இல்லாமல் போய்விடும்.
இது ஒரு தீர்வாக மட்டுமல்ல – அது ஒரு பழக்கமாகவே இருந்தது.
II. மருத்துவப் பயன்கள்:
1. காய்ச்சல் மற்றும் சளி:
கருநொச்சி இலைகளை கஷாயமாக செய்து காய்ச்சல், சளி, குணமாக பயன்படுத்தப்படுகின்றன.
பயன்பாடு:
- ஒரு கைபிடி கருநொச்சி இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து,
- அதிலிருந்து வரும் ஆவியை (ஸ்டீம்) 5–10 நிமிடங்கள் மூச்சில் இழுக்கவும் (தலையில் துணி போடலாம்)
- இது சளி, சைனஸிடிஸ், காய்ச்சலை குணமாக்கும்.
- 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
பாட்டியின் வார்த்தை:
“காய்ச்சல் வந்தா, நம்ம வீட்டுல மருத்துவமனைக்கு போக மாட்டாங்க. கருநொச்சி இலைகளை தண்ணீரில் 5-10 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், உடம்பு குணமாகும் . பராசிட்டமால் மாத்திரை போட்டு குணமாகும் முன்பே இயற்கை வீட்டு வைத்திய முறையில் நாம் விரைவாக குணமடைவோம்!”
2. வலி நிவாரணம்:
இந்த செடியில் உள்ள ஆண்டி-இன்ப்ளமேட்டரி தன்மையானது மூட்டு வலி, வீக்கம், ஆர்த்ரைட்டிஸ் போன்றவைக்கு தீர்வாக உதவும்.
பயன்பாடு:
- கருநொச்சி இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு லேசாக வதக்கவும்.
- வதக்கிய இலைகளை ஒரு துணியில் கட்டி லேசாக வலி உள்ள இடத்தில 20–30 நிமிடங்கள் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.
- நாள்பட்ட வலிகளுக்கு இதை தினமும் பயன்படுத்தலாம்
3. சுவாசக் கோளாறு:
கருநொச்சி இலைகளை ஆவி பிடிப்பது மூக்கடைப்பு மற்றும் சைனஸுக்கு உதவியாக இருக்கும்.
4. தோல் அரிப்பு அல்லது தோல் எரிச்சலுக்கான மருந்து:
பயன்பாடு:
- கருநொச்சி இலைகளை பறித்து, நன்றாக அரைத்து, பூச்சிக் கடி மற்றும் அலர்ஜி உள்ள இடத்தில் தடவவும்
- இல்லையெனில் இலைகளை கொதிக்க வைத்து அதன் தண்ணீரை குளிக்கப் பயன்படுத்தலாம் (குழந்தைகளுக்கு சிறந்தது)
5. பெண்களுக்காக:
பாட்டி சொல்வது போல, ” மாதவிலக்கு நாட்களில் ” பசியும், மனநிலை மாற்றங்களும் வரும். இதன் கஷாயம் மாதவிலக்கு வலிகள், மனச்சோர்வு, ஹார்மோன் மாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு.
பாட்டியின் எளிய கஷாய ரெசிபி (காய்ச்சல், சளிக்காக):
- 1 கைபிடி கருநொச்சி இலை + 1 டீஸ்பூன் சுக்கு + 5 மிளகு
- 2 கப் தண்ணீரில் கொதிக்கவைத்து 1 கப்பாக குறைய விடவும்
- வடிகட்டி சூடாக பருகலாம்
- நாள் ஒன்றுக்கு 1–2 முறை அருந்தலாம்
III. ஆன்மீக மற்றும் கலாசார நம்பிக்கைகள்:
கருநொச்சி எதிர்மறை சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டதாக நம்பப்படுகிறது.
பூஜை, திருவிழா, புதுமனை புகுவிழா போன்ற வழிபாடுகளில் பயன்படுத்தப் படுகிறது.
வாசலில் வைத்தால் கண்திருஷ்டி குறையும் என்றும் நம்பப்படுகிறது.
துணைத் தகவல் (Bonus Tip):
உலர்ந்த கருநொச்சி இலைகளை ஒரு சிறிய துணியில் கட்டி வைத்து அலமாரி, அரிசி டப்பா போன்ற இடங்களில் வைத்தால் பூச்சிகள் வராது.
இந்த செடியை பராமரிக்க வேண்டியது இல்லை!
கருநொச்சிக்கு எந்த தனி கவனமும், தண்ணீர் ஊற்றும் அட்டவணையும், உரமும் தேவையில்லை.
அது வெறும் மழையிலும் வெயிலிலும் வளர்கிறது.
நம் ஒவ்வொருவர் வீட்டிலும் கருநொச்சி ஒரு அங்கமாக இருக்கட்டும்! அது நம் பாட்டிகளின் ஞானம் போல அமைதியாக எந்த ஆரவாரமும் இன்றி வளர்கிறது.

Comments (2)
Venkatesan
Good information Madhu
Venkatesan
Good information Madhu. Appreciate your initiative and writing