கருப்பு குடை அல்லது அழகான வண்ணமயமான குடை?
வெயிலுக்கான சரியான குடையை தேர்ந்தெடுப்பது எப்படி?
எனக்கு வண்ணமயமான, தனித்துவமான குடைகளை மிகவும் பிடிக்கும். எனக்கு மட்டுமா? நம்மில் பெரும்பாலோர் பூக்கள் வடிவமைப்பு கொண்ட வண்ண குடைகளை விரும்புவோம் அல்லவா? ஒரு அழகான இளநிற பிங்க் அல்லது எலுமிச்சை மஞ்சள் குடையின் கீழ் வெயிலில் நடக்கிறதே ஒரு சந்தோஷ அனுபவமாக இருக்கும். இது நல்லதா அல்லது தீங்கா?
பொதுவாக நாம் கருப்பு நிறம் வெப்பத்தை அதிகமாக ஈர்க்கும் என நம்புவதால் வெயிலில் கருப்பு குடையை பயன்படுத்தக்கூடாது என நினைப்போம். ஆனால் உண்மையில், வெயிலில் இருந்து பாதுகாப்புக்கு மிகச் சிறந்தது கருப்பு குடையே!
ஏன்?
ஏனெனில் கருப்பு நிறம் அதிகபட்ச UV (அல்ட்ராவயலைட்) கதிர்களை உறிஞ்சுகிறது. இதன் மூலம் உங்கள் தோலுக்கு வரும் UV தாக்கங்கள் குறைகின்றன. அதாவது உங்கள் தோலைச் சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்கும் சக்தி கருப்பு குடைக்கு அதிகம்.மேலும், கருப்பு நிறம் கண்ணுக்குத் தெரியக் கூடிய ஒளியையும் (visible light) சிறந்த முறையில் தடுக்கும். அதனால் மிகவும் வெயிலான நாட்களிலும், கருப்பு குடை ஆழமான நிழலை வழங்கி, பிரகாசத்தை (glare) குறைக்கிறது. அது ஒளியை முழுமையாகத் தடுக்கிறது.

குடையின் உட்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் – இரண்டும் முக்கியம்!
- குடையின் வெளிப்பக்கம் கருப்பாக இருந்தால், அது வெளிச்சத்தை வெளியில் உறிஞ்சி, உள்பக்கம் புகாமல் தடுக்கிறது.
- குடையின் உள்பக்கம் கருப்பாக இருந்தால், பிரதிபலிக்கும் கதிர்கள் சுற்றிச் சுழன்று உங்கள் முகத்தை அடைவதைத் தடுக்கும். இது வெயிலான தெருக்கள் அல்லது மணற்பரப்புகளில் பயனளிக்கிறது.
ஆகையால், கருப்பு குடை சூரிய ஒளி மற்றும் UV கதிர்களை மிகச் சிறப்பாகத் தடுத்து, கடுமையான வெயிலிலும் உங்களை மேலும் குளிராகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது, குறிப்பாக அதிக வெப்பம் மற்றும் பிரகாசம் உள்ள இடங்களில் பாதுகாப்பானது.
இப்போது உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம் – வெயிலுக்குப் பளிச்சென்ற வண்ணக் குடைகள் பயன்படுத்த கூடாதா?
பொதுவாக, பெரும்பாலான வண்ணக் குடைகள், குறிப்பாக மஞ்சள், இளம்பிங்க், வானநீலம் (Sky blue) போன்ற இளநிறங்கள், கருப்பு குடையைப்போல் UV கதிர்களை சிறப்பாகத் தடுக்க முடியாது. சில சூரியக் கதிர்கள் குடையின் ஊடாகப் புகவோ அல்லது உள்ளே பிரதிபலிக்கவோ முடியும். அதனால், நமக்கு மிகக் குறைந்த UV பாதுகாப்பே கிடைக்கும்.
இள நிறங்களோ அல்லது பிரகாசமான வண்ணங்களோ ஒளியை பிரதிபலிக்கக்கூடும், ஆனால் அதே நேரத்தில், அவை அதிகமான கண்ணுக்குத் தெரிவதான ஒளியை (Visible light) உள்வாங்கி விடும். இதனால் குடையின் கீழ் அதிக ஒளி புகுவதால் இன்னும் பிரகாசமாகவும் வெப்பமாகவும் உணரப்படலாம்.
நீங்கள் ஸ்டைலும் சிறிது பாதுகாப்பும் வேண்டுமென்றால், முழுமையான UV பாதுகாப்பு அவசியமில்லாத குறுகிய தூர நடைக்கு வண்ண குடைகள் சரியாக வேலை செய்யும்.
“இல்லை, எனக்கு நீண்ட நேர சூரிய வெளிப்பாடு / மிகுந்த UV கதிர்கள் உள்ள நாட்களுக்கு ஏற்ற, அதே சமயம் ஸ்டைலிஷ் ஆன குடை வேண்டும்” என்கிறீர்களா? கவலை வேண்டாம்!
இப்போது, வெளிப்புறம் வண்ணமயமாகவும், உள்ளே கருப்பு அல்லது சில்வர் லைனிங் கொண்ட இரட்டைக் கட்டமைப்புடைய (dual-layer) குடைகள் கிடைக்கின்றன.
இவை UV-கோட்டிங் செய்யப்பட்டவையாகவோ அல்லது பாதுகாப்பு நலன் கருதி சிறப்பாக வடிவமைக்க பட்டதாக இருக்கும். (பல உயர்தர வெயில் குடைகள் வெளியில் வண்ணமாக இருந்தாலும், உள்ளே கருப்பு அல்லது சில்வர் லைனிங் கொண்டிருக்கும்). மேலும், உள்பக்கம் கருப்பு அல்லது navy blue போன்று கருமையான நிறத்தில் இருந்தால், அது உள்ளே பிரதிபலிக்கும் ஒளியைக் கட்டுப்படுத்தி, சூரிய பாதுகாப்புக்கு மிக உகந்ததாக அமையும்.
இதனால், உங்களுக்கு அழகும் (aesthetic) உறுதியான UV பாதுகாப்பும் கொண்ட குடை கிடைக்கும்!
ஆனால் உண்மையில், UV கதிர்கள் மற்றும் உங்கள் தோலுக்கிடையே ஒரு போராட்டம் நடக்கும்போது, கருப்பு குடையே நிழல் என்ற போரில் வெல்லும்.
சூரியனிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், நாம் குளிர்ச்சியாக உணர வேண்டும் என்றால் வண்ண குடைகளை தவிர்த்து கருப்பு நிறத்தை தான் தேர்வு செய்ய வேண்டும்.
ஆம், கருப்பு குடை வெப்பத்தை உறிஞ்சுவதால் அது சுடசுட வெப்பமாக இருக்கலாம். ஆனால், அது நன்றாக காற்றோட்டத்துடன், UV எதிர்ப்பு துணியால் செய்யப்பட்டிருந்தால், அந்த வெப்பம் உங்களுக்குக் கீழே நிறைய பரவுவதில்லை.
உண்மையில், அது இளநிற வண்ண குடைகள் போல அதிகக் கதிர்களை உள்வாங்காமல் அல்லது bounce ஆகாமல், உங்களுக்கு ஒரே குளிர்ந்த தனிப்பட்ட நிழலை உருவாக்குகிறது.
வண்ணம் அழகாக இருக்கலாம்… ஆனால், கருப்பு தான் வெயிலை ஜெயிக்கும்!
